காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் பலி
2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கிடையில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் பகுதியாக, காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை மீது நேற்று இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக காசா பொதுமக்கள் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மமுத் பசல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், அல் ஜசீரா வெளியிட்ட அறிக்கையில்,
“இஸ்ரேல் தாக்குதலில் எங்கள் புகைப்படக் கலைஞர் முகமது சலமா உயிரிழந்தார். இந்தக் கொடூரச் செயலை கடுமையாகக் கண்டிக்கிறோம்,” எனக் கூறியுள்ளது.
மேலும், அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பகுதிநேர செய்தியாளராக பணியாற்றிய மரியம் டக்காவும் உயிரிழந்துள்ளார். காசா–இஸ்ரேல் மோதல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.