ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு – பிற டி20 லீக்குகளில் பங்கேற்கத் திட்டம்
இந்திய ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் உலகம் முழுவதும் நடைபெறும் பிற டி20 ஃப்ரான்சைஸ் லீக்குகளில் விளையாட விருப்பம் இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் நிறைவடைந்துள்ளது. ஆனால், பிற சர்வதேச டி20 லீக்குகளில் என் புதிய கட்டம் தொடங்குகிறது. எனக்காக நினைவுகளை உருவாக்கிய என் அணிகளுக்கும், என்னை முன்னேற்றிய பிசிசிஐக்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
38 வயதான அஸ்வின், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2009-ல் ஐபிஎல்-ல் அறிமுகமான அவர், அடுத்த ஆண்டே இந்திய அணியில் இடம்பிடித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கினார்.
ஐபிஎல் வரலாற்றில் 221 போட்டிகளில் பங்கேற்று, 187 விக்கெட்டுகளைப் பெற்றதோடு, 833 ரன்களையும் எடுத்துள்ளார்.