மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகள் முன்னிறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (ஆக.26) நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கோவை மண்டல தலைவர் ஏ.எஸ். பாபு, கோரிக்கை மனுவை பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் வழங்கினார்.
பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டி தமிழகத்திற்கு வரும் உபரி நீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உச்சநீதிமன்றமும் இதற்கு அனுமதி இல்லையென்று உறுதிப்படுத்தியுள்ளதையும் அவர் கூறினார்.
முல்லைப் பெரியாறு அணை 142 அடி நீர்மட்டத்தில் சாகுபடி செய்ய வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக 136 அடி மேலே நீரை நிரப்ப கேரளா அரசு அனுமதி மறுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு மதிக்கவில்லை. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
மரபணு மாற்று தொழில்நுட்பத்தை எதிர்த்து 15 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்தப்படுகின்றது. மத்திய அரசு அனுமதி பெறாத விதைகள் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக முயற்சி செய்யும் போது, விவசாயிகள் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் டி.ஏ.பி மற்றும் யூரியா உரப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை யூரியா ரூ. 1,000 வரை விலை உயர்ந்து கிடைக்கிறது. மத்திய அரசு, உரத்துறை அமைச்சர்கள், இணை இடுபொருள் கட்டாய விற்பனையை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் எல்.ஆதிமூலம், நெல்லை மண்டல செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமைராஜ், மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை, தஞ்சாவூர் தெற்கு, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்றனர்.