“அரசியலமைப்பை காக்க குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்” – சுதர்சன் ரெட்டி
இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி, இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது:
“இன்றைய சமூகத்தில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. இதை நிறுத்த வேண்டும். ஏனெனில் ஜனநாயக நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களிலிருந்து மட்டுமல்ல, மாறாக மதம், சாதி, மொழி, பிராந்தியம் என்ற அடிப்படையில் சமூகத்தைப் பிரிப்பதிலிருந்தும் வருகிறது என்று நான் நம்புகிறேன். இதைத் தடுக்கவே இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.
நான் ஒரு தாராளவாத ஜனநாயகவாதி. அரசியலமைப்பைப் பாதுகாப்பதே எனது நோக்கம். அதற்காகவே குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன். இதுவரை என் கடமை அரசியலமைப்பை நிலைநிறுத்துவதே ஆகும்.
நீதிபதி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் – இவர்களது சத்தியப் பிரமாணத்தில் காணப்படும் வேறுபாடு இதுவே. பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். தமிழ்நாட்டுக்கும், தெலுங்கானாவுக்கும் தனி குடியுரிமை கிடையாது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிலோ அல்லது நான் தெலுங்கானாவிலோ பிறந்தது எங்கள் விருப்பப்படி அல்ல. எனவே தெலுங்கானா vs தமிழ்நாடு என்ற பிரிவு இல்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10 வரை இருந்தாலும், அவர் கடந்த ஜூலை 21 அன்று ராஜினாமா செய்தார். போட்டி ஏற்பட்டால், செப்டம்பர் 9 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிரா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், இண்டியா கூட்டணியின் வேட்பாளராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.