‘துயரத்தில் மவுனம் கொண்டோம்’ – 3 மாத இடைவெளிக்கு பின் ஆர்சிபி ட்வீட்

கடந்த ஜூன் மாதம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது, பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பின், மூன்று மாதங்கள் கழித்து ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025 சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு. இதனை கொண்டாடும் வகையில் பெங்களூருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி ஸ்டேடியத்தில் விழா நடந்தது. அந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் இரு இடங்களிலும் திரண்டனர்.

அப்போது சின்னசாமி மைதானத்துக்குள் ஒரே நேரத்தில் கூட்டம் நுழைய முயன்றதால், ஏற்பட்ட தள்ளுமுள்ளியில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆர்சிபி ட்வீட்:

“அன்பான டுவல்த் மேன் ஆர்மிக்கு, இதுவே எங்கள் இதயம் கனிந்த கடிதம். நாங்கள் கடைசியாக பதிவு இட்டதற்கு மூன்று மாதங்கள் ஆகிறது. கொண்டாட்ட நினைவுகள் மற்றும் மகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்த இடம் இதுதான். ஆனால் ஜூன் 4ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றி விட்டது. அந்த நாள் எங்களை மனம் உடைய வைத்தது. அதற்குப் பின் இந்த தளம் மவுனமானது.

எங்களின் மவுனம் நாங்கள் இல்லாததால் அல்ல. துயரத்தின் காரணமாக மவுனம் காத்தோம். பார்த்தோம், கற்றுக் கொண்டோம். பொறுப்புணர்வோடு சில மாற்றங்களைத் தொடங்கியுள்ளோம். இன்று மீண்டும் இந்த தளத்திற்கு திரும்பியுள்ளோம். அது கொண்டாட்டத்துக்காக அல்ல; அக்கறையோடு திரும்பியுள்ளோம். ஒன்றாக முன்னேறுவோம். கர்நாடகத்தின் பெருமையாக நீடிப்போம்” என்று ஆர்சிபி தெரிவித்துள்ளது.

Facebook Comments Box