தவறான வழிகாட்டிய கூகுள் மேப் – காரில் சென்ற 3 பேர் பலி
ராஜஸ்தானில், கூகுள் மேப் காட்டிய பாதையைப் பின்பற்றிய கார், சேதமடைந்த பாலம் வழியாகச் செல்ல முயன்றதில் வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.
சித்தோர்கர் மாவட்டம் கனகேடா கிராமத்தைச் சேர்ந்த 9 உறவினர்கள், பில்வாரா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு சென்றனர். வழிபாடு முடிந்த பின், அதிகாலையில் காரில் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது கனமழையால் சாலைகள் அடைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதை எடுத்தனர்.
இதன் போது, பனாஸ் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த பாலத்தை கடக்க முயன்றனர். நடுவழியில் கார் பள்ளத்தில் சிக்கி, பின் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது.
அவர்களின் குரல் கேட்டு வந்த கிராம மக்கள் உடனடியாக படகின் உதவியுடன் 5 பேரை மீட்டனர். ஆனால் தாய்-மகள், மற்றொரு பெண் என 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும், 8 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.