பிரதமர் மோடியிடம் 4 முறை அழைத்தும் பதில் இல்லை – ட்ரம்ப் பதற்றத்தில்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு தொடர்பாக பேச, அதிபர் டொனால்டு ட்ரம்ப் நான்கு முறை தொலைபேசியில் அழைத்தும் பிரதமர் நரேந்திர மோடி பேச மறுத்துவிட்டதாக ஜெர்மனி, ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் ட்ரம்ப், இந்தியாவுக்கு 25% வரி விதித்ததுடன், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25% வரி விதித்தார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு மொத்தம் 50% வரி அமலாகியுள்ளது.

இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், “இந்திய விவசாயிகளையும் சிறு வணிகர்களையும் பாதிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று மோடி உறுதியுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜெர்மனியின் அல்லெஜிமெய்ன் ஜெய்டங் மற்றும் ஜப்பானின் நிக்கீ ஏசியா பத்திரிகைகள் வெளியிட்ட தகவலின்படி, வர்த்தக வரி விவகாரம் குறித்து பேச ட்ரம்ப் பலமுறை அழைத்தும், மோடி உரையாட மறுத்துவிட்டார். இதற்கிடையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்த தகவலை நேரடியாக மறுத்தும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

இந்திய தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “முக்கிய விவகாரங்களைப் பற்றி தொலைபேசியில் பேசுவது பிரதமர் மோடியின் நடைமுறை அல்ல. ட்ரம்ப் உடன் உரையாடினால் அது ஊகங்களின் அடிப்படையில் திரித்து வெளியிடப்படும் என்பதால் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போரின் போது ட்ரம்ப் கூறிய கருத்துகளால், அவர் மீதான நம்பிக்கை குறைந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா – இந்தியா இடையே இந்த வர்த்தக வரி மோதல் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி பேச மறுத்ததால் ட்ரம்ப் கடும் பதற்றத்தில் உள்ளார் எனக் கூறப்படுகிறது.


சீன அதிபரின் ரகசிய கடிதம்

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ரகசிய கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவின் வரி போரை எதிர்கொள்வதற்காக இந்தியா – சீனா ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், உலக நன்மைக்காக இணைந்து நிற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்குச் சென்று ஜின்பிங்கை சந்தித்தார். பின்னர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்தார்.

சமீப காலம் வரை எல்லை பிரச்சினைகளால் பல நாடுகளுடன் மோதல் நிலை வகித்த சீனா, தைவானைத் தவிர்த்து அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த முனைந்துள்ளது. இது சர்வதேச அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Facebook Comments Box