கனமழையால் இமாச்சலின் மணிமகேஷ் யாத்திரையில் 10 யாத்ரீகர்கள் உயிரிழந்ததோடு, 4 பக்தர்கள் மாயமாகினர்.

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் வருடாவருடம் நடைபெறும் மணிமகேஷ் யாத்திரை, இவ்வாண்டு பருவமழையின் தாக்கத்தால் கடுமையாகச் சிக்கியது. அதிகாரிகள் தெரிவித்ததாவது, 10 பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் இன்னும் காணவில்லை.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, கனமழை, நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக யாத்திரை மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு செயலாளர் டிசி ராணா, “மணிமகேஷ் யாத்திரையில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் குழுக்கள் ஆகியவை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன” என்றார்.

தொடர்ச்சியான மழையும் நிலச்சரிவும் காரணமாக பர்மௌர்–சம்பா இடையிலான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் உயரமான மலையேற்றப் பாதைகளிலும் நீரோடைகளின் அருகாமையிலும் பக்தர்கள் சிக்கினர். மீட்பு குழுக்கள் விரிவான நடவடிக்கைகள் மேற்கொண்டு சுமார் 6,000 யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்டு சம்பாவுக்கு அழைத்துச் சென்றுள்ளன.

உடல் ரீதியாக பலவீனமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு சம்பா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பா–பதான்கோட் நெடுஞ்சாலை தற்போது பழுது பார்த்து இயக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் மொபைல் இணைப்பு மீட்டெடுக்கப்பட்டது. சாலைகள் திறந்திருக்கும் இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் நடைபாதைகள் வழியாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். பெரும்பாலான மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் வெப்பநிலை குறைவு காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாத்திரை பாதையில் லங்கர் குழுக்கள், உள்ளூர் உணவகங்கள், காவல்துறை ஆகியவற்றின் உதவியுடன் உணவு, தங்குமிடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபாதைகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க கூடுதல் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இமாச்சலில் பருவமழையால் 164 பேர் உயிரிழந்ததோடு, 40 பேர் காணவில்லை. மழையால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் 153 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தத்தில் பருவமழை காரணமாக சுமார் ரூ.2,700 கோடி இழப்பு மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments Box