அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு நாடாளுமன்ற அனுமதி இன்றி அதிக வரிகளை விதித்த உத்தரவை, அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு ட்ரம்ப்புக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இப்போது கேள்வி எழுவது – ‘அடுத்து ட்ரம்ப்பிடம் என்ன ஆப்ஷன் உள்ளது?’ என்பதாகும்.
நிபுணர்கள் கூறுவதாவது: “இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தினால், ட்ரம்ப் அரசின் வரி கொள்கை முற்றிலும் தடுமாறும். அமெரிக்காவின் எதிர்கால கோரிக்கைகளை நாடுகள் நிராகரிக்கும்; பழைய ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்படும்.”
அதே நேரத்தில், ட்ரம்ப் இறக்குமதி வரிகளை எப்படியாவது விதிக்க விரும்பினால், சில சட்ட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முன்பு போல் விரைவாகவும் தன்னிச்சையாகவும் முடியாது. உதாரணமாக, கடந்த மே மாதம் அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது – 1974 வர்த்தகச் சட்டத்தின் கீழ், அதிபருக்கு 15% வரியை 150 நாட்களுக்கு மட்டுமே விதிக்கும் அதிகாரம் உள்ளது; அதற்கும் மேல் அதிகாரம் அதிபரிடம் இல்லை.
எனினும், ட்ரம்ப் நிர்வாகம் 1962 ஆம் ஆண்டின் வர்த்தக விரிவாக்கச் சட்டத்தை சுட்டிக்காட்டி வரிவிதிப்பை நியாயப்படுத்த முயற்சிக்கலாம். இரும்பு, அலுமினியம், ஆட்டோமொபைல் பொருட்கள் மீதான வரிகள் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றிற்கும் கூட வர்த்தகத் துறையின் ஆய்வறிக்கை அவசியம்.
இந்தச் சூழலில் ட்ரம்ப் கூறியிருப்பது:
“எல்லா வரிகளும் நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறோம். இறுதியில் வெற்றி நிச்சயம் அமெரிக்காவுக்கே.”
அதனால், இப்போது முக்கியமானது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பே.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுவது – “அதிபர் ட்ரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை. வரிவிதிப்பு என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டது. அதிபருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் வரையறுக்கப்பட்டதே. வரம்பற்ற அதிகாரத்தை நாடாளுமன்றம் ஒருபோதும் வழங்கவில்லை.”
இதனாலேயே நியூயார்க் வர்த்தக நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், அக்டோபர் 14 வரை மேல்முறையீடு செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலை, ட்ரம்ப்புக்கு கடுமையான சட்ட மற்றும் அரசியல் சவாலாக மாறியுள்ளது.