2018-19-ல் கோலியின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் புஜாரா. மெல்போர்ன், அடிலெய்ட், சிட்னி மைதானங்களில் மூன்று சதங்கள் அடித்து, இந்தியாவுக்கே அல்லாமல் முழு துணைக்கண்டத்திற்கே பெருமை சேர்த்தார். ஏனெனில் அதுவரை துணைக்கண்ட அணிகள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை.
ஆனால், அந்தப் புஜாராவே ஒருமுறை கர்நாடக ரசிகர்களிடம் ‘ஏமாற்றுக்காரர்’ என திட்டப்பட்டார் என்பதைக் கேட்டால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தேசப்பற்று காட்டும் ரசிகர்கள் ஒருபுறம் அவரை ஹீரோவாகக் கொண்டாட, பிராந்திய போட்டித் தன்மையால் அதே ரசிகர்களே அவரை “cheater… cheater…” என்று கூவியது இந்திய ரசிகர்களின் முரண்பாடான மனநிலையை வெளிப்படுத்துகிறது.
அது 2019 ஜனவரி மாதம் பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி அரையிறுதி. சவுராஷ்ட்ரா, கர்நாடகாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. இலக்கு 279 ரன்கள். வினய் குமார், மிதுனின் வேகப்பந்துவீச்சில் சவுராஷ்ட்ரா 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அந்த நேரத்தில் புஜாரா அற்புதமான இன்னிங்ஸ் ஆடி 266 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து (17 பவுண்டரிகள்), நாட் அவுட்டாக இருந்து அணியை வெற்றிக்குள் இட்டுச் சென்றார். ஷெல்டன் ஜாக்சனும் ஒரு சதம் அடித்தார். சவுராஷ்ட்ரா 279/5 என வெற்றி பெற்றது.
ஆனால், கர்நாடக ரசிகர்களின் கோபத்துக்குக் காரணம் வேறு. அந்த இன்னிங்ஸில் புஜாரா இருமுறை பந்தை எட்ஜ் செய்து கேட்ச் ஆனார் என்று அவர்கள் நம்பினர். ஆனால், இருமுறையும் நடுவர் அவுட் தரவில்லை. புஜாராவும் தானாகவே விலகாமல் விளையாடினார். இதுவே கர்நாடக ரசிகர்களை கொதிக்க வைத்தது. அப்போதே முழுக் களத்தில் “cheater… cheater…” என்று கத்தியது.
ஆஸ்திரேலிய தொடரில் ஹீரோவாகக் கொண்டாடப்பட்ட புஜாரா, கர்நாடக ரசிகர்களின் பார்வையில் வில்லனாக மாறினார். உண்மையில் பார்த்தால், அந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஜாஷ் ஹேசில்வுட் சொன்னது போல புஜாரா ஆஸ்திரேலியர்களுக்கும் வில்லன் தான். ஆனால் இந்தியாவின் டார்லிங், சவுராஷ்ட்ராவின் பெருமை என்பதும் மறுக்க முடியாத உண்மை.