அமெரிக்க வரி பாதிப்பை சமாளிக்க வரும் நல்ல முன்னேற்றங்கள் உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரத்தில் உருவாகும் நல்ல முன்னேற்றங்கள், அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் தாக்கத்தை சமன் செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் கூறினார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர்,
“உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறனை ஊக்குவிக்கும் காரணிகள் உறுதியாக உள்ளன. இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தியுள்ளதன் விளைவுகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் முதலீட்டில் தெரிந்தே தாக்கும். இதை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் மந்தநிலை கட்டுக்குள் இருக்கும். காரணம், கூடுதல் வரி சுமை நீண்ட காலம் நீடிக்காது என்பதே எனது நிலைப்பாடு.
வரி உயர்வின் விளைவுகள் இருந்தாலும் அதை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் துறைகளில் வேலை இழப்பு குறையும். அத்துடன், ஏற்றுமதி நிறுவனங்கள் புதிய சந்தைகளை தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
நீண்ட காலத்தில் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடிவு எடுக்கும். மேலும், உள்நாட்டு தேவையின் அதிகரிப்பு மூலம் அவர்களின் உற்பத்தி பாதுகாக்கப்படும். இந்தாண்டு சிறப்பான பருவமழை இருப்பதால் விவசாயமும், கிராமப்புற தேவையும் உயரும். எனவே, வேலை இழப்பு ஏற்பட்டாலும் அது மிகப் பெரிய அளவில் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8% என்று வெளியானதற்கான கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அனுராதா தாக்கூர்,
“முதல் காலாண்டு எண்கள் நமது பொருளாதாரத்தின் வலிமையான அடிப்படை நிலையை வெளிப்படுத்துகின்றன. பொருளாதாரத்தில் ஊக்கம் ஏற்பட்டு வருவதை இது சுட்டிக்காட்டுகிறது. வலுவான அடிப்படையில் நமது பொருளாதாரம் நிலைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
உற்பத்தி, விநியோகம், கட்டுமானம், சேவைத் துறைகளில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயமும் மேம்பட்டு வருகிறது. அறுவடை மற்றும் விதைப்பு இரண்டும் கடந்த காலாண்டைவிட அதிகரித்துள்ளன. போதுமான மழை கிடைத்துள்ளது” என்று கூறினார்.