யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், முதலிடம் வகிக்கும் ஜன்னிக் சின்னர், 27-வது நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ஷபோவலோவ் கைப்பற்றியபோதும், தொடர்ந்து மூன்று செட்களில் 6-4, 6-3, 6-3 என வென்ற சின்னர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 4-வது நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், அமெரிக்காவின் டாமி பாலிடம் கடும் போராட்டத்தில் 7-6 (7/5), 6-7 (4/7), 6-3, 6-7 (5/7), 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதேபோல், 10-வது நிலை வீரரான இத்தாலியின் லாரன்ஸோ முசெட்டி, 24-வது நிலை வீரரான பிளேவியோ கோபோலியிடம் ஆட்டத்தின் நடுப்பகுதியில் விலகியதால் வெற்றி பெற்றார்.

மேலும், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் (25-வது நிலை) 4-6, 7-6 (9/7), 6-4, 6-4 என்ற கணக்கில் 3-வது நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவை அதிர்ச்சி தோல்வியுறச் செய்தார். 15-வது நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலேவ், 5 செட் நீண்ட ஆட்டத்தில் ஹாங்காங்கின் கோல்மேன் வாங்கை 2-6, 6-4, 6-3, 4-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில், 2-வது நிலை வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக் 29-வது நிலை வீராங்கனை ரஷ்யாவின் அன்னா காலின்ஸ்கயாவை 7-6 (7/2), 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

8-வது நிலை வீராங்கனை அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வென்றார்.

18-வது நிலை வீராங்கனை பிரேசிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மையா, 6-1, 6-2 என்ற கணக்கில் கிரீஸின் மரியா சக்காரியை சாய்த்தார்.

13-வது நிலை வீராங்கனை ரஷ்யாவின் இகாட்டெரினா அலெக்சான்ட்ரோவா, 6-0, 6-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் லாரா சீஜ்முண்டை எளிதில் வீழ்த்தினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு:

இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, மார்க்கோஸ் கிரோன்-லேர்னல் டியன் ஜோடியை 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

ஆனால், இந்தியாவின் ரோஹன் போபண்ணா-மொனாக்கோ வீரர் ரொமெய்ன் அர்னீடோ ஜோடி 4-6, 3-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் கேஷ்-ஜேம்ஸ் டிராசி ஜோடியிடம் தோல்வி கண்டது.

மேலும், இந்தியாவின் அர்ஜுன் கதே-ஈக்வடாரின் டியாகோ ஹிடால்கோ ஜோடி 7-5, 6-7 (4), 4-6 என்ற கணக்கில் குரோஷியாவின் மேட் பாவிக்-எல் சால்வடாரின் மார்செலோ அரேவலோ ஜோடியிடம் போராடி தோற்றது.

Facebook Comments Box