சினிமாவில் 50 ஆண்டுகள் – பாலகிருஷ்ணாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா) திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு, லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் அவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற முதல் இந்திய நடிகராகவும் அவர் பெருமை பெற்றுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாலகிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள சிறப்பு வாழ்த்து வீடியோவில், பாலய்யாவை தனது பாணியில் பாராட்டியுள்ளார். அதில்,
“பாலய்யா பேசும் பன்ச் வசனங்களுக்கு தனித்துவமான அழகு உண்டு. அவர் எப்போதும் நேர்மறை சிந்தனையோடு வாழ்பவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் சந்தோஷம் மற்றும் சிரிப்பால் நிரம்பி இருக்கும். அவருக்கு போட்டியாளர் யாருமில்லை – அவரே அவர்! அவர் நடிக்கும் படம் வெற்றி பெற்றால், அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.