ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வு அவசியம் – உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களும், பதவி உயர்வு விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதிப் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உறுதியான தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, ஆசிரியர் நியமனத்திற்கும் பதவி உயர்விற்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர், தீர்ப்பளித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திலிருந்து மொழி, மதச் சிறுபான்மை பள்ளிகள் விலக்கு பெறுவது குறித்த முன் தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதைக் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம். அதுவரை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

பல ஆண்டுகளாக (20 – 30 ஆண்டுகள்) பணியாற்றி வரும் ஆசிரியர்களை தற்போது டெட் தேர்வு எழுதச் சொல்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல. எனவே, 5 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலம் இருக்கும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பதவி உயர்வு விரும்பினால் கட்டாயமாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததற்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள், தற்போது 5 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காலம் கொண்டிருந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வு பெற்றவர்களாகக் கருதப்பட்டு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறன்கள் காரணமாக டெட் தேர்வு எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். எனினும், புதியதாக ஆசிரியர் பணியில் சேர விரும்பும் அனைவரும், பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று முழுமையான தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அவர்கள் பணியில் தொடர முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Facebook Comments Box