மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்
மராத்தா இடஒதுக்கீட்டு போராட்டம் நடைபெற்று வரும் மும்பை ஆசாத் மைதானத்தை காலி செய்யுமாறு போராட்ட தலைவரான மனோஜ் ஜாரங்கி மற்றும் அவரது அணியினருக்கு மும்பை போலீசார் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஓபிசி பிரிவில் மராத்தா சமூகத்துக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கும், மராத்தாக்களை குன்பி சமூகத்தின் துணை சாதியாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்பதற்கும் கோரி, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் ஜாரங்கி ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஆசாத் மைதானத்தை மட்டுமின்றி சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல், சாலைகள், பூங்காக்கள் போன்ற இடங்களிலும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தெற்கு மும்பையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்ததோடு, வணிகமும் பாதிக்கப்பட்டதாக கடைகள், தொழில் முனைவோர் சங்கங்கள் தெரிவித்தன.
வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வீரேன் ஷா, “நகரின் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், வணிக நடவடிக்கைகளை காப்பாற்றவும் அரசு மற்றும் உயர்நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 1 ஆம் தேதி விசாரணை நடத்திய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர குகே, கவுதம் அன்காட் தலைமையிலான அமர்வு, போராட்டம் அமைதியாக நடைபெறவில்லை என்றும், முன்கூட்டியே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகவும் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி:
- ஜாரங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் செப்டம்பர் 2 நண்பகலுக்குள் ஆசாத் மைதானத்தையும் சுற்றுப்புறச் சாலைகளையும் காலி செய்ய வேண்டும்.
- உயர்நீதிமன்ற வளாக நுழைவாயில்கள் மறிக்கப்பட்டதால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர்.
- போராட்டக்காரர்கள் அனுமதி பெறாமல் சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
- “கோரிக்கைகள் நிறைவேறும் வரை மும்பையைவிட்டு செல்லமாட்டேன்; உயிரிழக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்” என ஜாரங்கி கூறியது, சட்டரீதியான அச்சுறுத்தலாகும்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில் ஆசாத் மைதான காவல்துறையினர், போராட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதால் ஜாரங்கி மற்றும் அவரது குழுவினருக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.