‘கட்டா குஸ்தி 2’ அறிவிப்பு வீடியோ வெளியானது
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் செல்லா அய்யாவு மீண்டும் கை கோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை உருவாக்க உள்ளனர்.
செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து தொடர்ச்சிப் படத்தை உருவாக்குகிறது. வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
முதல் பாகம்போலவே, இரண்டாவது பாகமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்படுகிறது. தொடர்ச்சிப் படமாக வருவதால், முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் இதிலும் அதே கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இதுகுறித்த அறிமுகக் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.
படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறது தயாரிப்பு குழு. ரூ.5 கோடி செலவில் உருவான முதல் பாகம், ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன் வெற்றியால், இரண்டாவது பாகத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது. விநியோகஸ்தர்களிடமும் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.