மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி – உண்ணாவிரதம் முடித்த ஜராங்கே அறிவிப்பு
மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் தொடர்பான அரசுத் தீர்மானம் வெளிவந்தவுடன், தனது தொடர்ச்சியான உண்ணாவிரதத்தை முடித்து, ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆகஸ்ட் 29 முதல் இடஒதுக்கீடு கோரி ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மும்பை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 3 மணிக்குள் அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தலைமையிலான குழு ஜராங்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில், தகுதியான மராத்தாக்களுக்கு குன்பி சாதிச் சான்றிதழ்கள் வழங்குதல், சதாரா சமஸ்தானம் தொடர்பான தீர்மானத்தை ஒரு மாதத்துக்குள் எடுப்பது, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் வாபஸ் பெறுதல், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, தனது கோரிக்கைகள் நிறைவேறியுள்ளன எனக் கூறிய ஜராங்கே, “மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி பெற்றது” என்று அறிவித்தார். போராட்டக்காரர்களிடம் உரையாற்றிய அவர், “நாம் வெற்றிபெற்றுள்ளோம்” எனக் கூறினார்.