செமிகண்டக்டர் துறையில் முன்னேற்றம் : இந்தியாவில் உருவான முதல் 32-BIT CHIP!

இந்திய விண்வெளி தொழில்நுட்பத்தில், ஏவுகணை வாகனங்களுக்காக முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் 32-BIT Micro Processor உருவாக்கப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி தொகுப்பு:

பிரதமர் மோடியின் India Semiconductor Mission (ISM) திட்டம் 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் வலுவான செமிகண்டக்டர் மற்றும் Display Ecosystem அமைப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

India Semiconductor Mission இந்தியாவை மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்புக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.65,000 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் செயல்படும் ISM மற்றும் உலகளாவிய SEMI நிறுவனம் இணைந்து SEMICON INDIA 2025 மாநாட்டை நடத்தி வருகிறது.

இந்த மாநாட்டின் நோக்கம், பிரதமர் மோடியின் “இந்தியா மின்னணு உற்பத்தி, வடிவமைப்பு, புதுமை மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் முன்னணியில் நிலைநிற்க வேண்டும்” என்ற தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லுவதாகும்.

டெல்லியின் யஷோபூமியில் நடைபெற்ற SEMICON INDIA 2025 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது; ஆனால் சிப்புகள் டிஜிட்டல் வைரங்கள் எனக் கூறப்படுகின்றன. இந்தியா செமிகண்டக்டர் துறையில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், உலக சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், ஏவுகணை பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு 32-BIT Micro Processor-கள் VIKRAM 3201 மற்றும் KALPANA 3201 அறிமுகப்படுத்தப்பட்டன. இது, இந்திய விண்வெளி மின்னணுவியல் துறையின் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

VIKRAM 3201 — விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) வடிவமைக்கப்பட்டு, சண்டிகர் செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. இது, முந்தைய 16-BIT VIKRAM 1601 சிப்பின் மேம்பட்ட வடிவமாகும். கடுமையான சுற்றுச்சூழல் நிலைகளிலும் ஏவுகணை வாகனங்களுக்கு இது சிறப்பாகச் செயல்படும். தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வழிசெலுத்தல், பாதை கணக்கீடு, சென்சார் தரவுகள் பகுப்பாய்வு மற்றும் 3D கிராபிக்ஸ் ஆகியவற்றை வழங்கும் திறனும் கொண்டது. மேலும் -55°C முதல் 125°C வரை வெப்பநிலையைத் தாங்கும்.

KALPANA 3201 — திறந்த மூல மென்பொருள் கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலுடன் இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான மென்பொருள் சோதனைகளில் வெற்றியடைந்த இதன் பல்துறை திறன், விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடுகளில் பரந்தளவில் உதவுகிறது.

தற்போது இந்தியாவில் 6 செமிகண்டக்டர் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன; மேலும் 4 ஆலைகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 79-வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, “இந்திய சிப்புகள் விரைவில் சந்தைக்கு வரும்; இனி இந்த துறையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறியிருந்தார்.

2030க்குள், இந்தியாவின் செமிகண்டக்டர் வருவாய் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் உயரும் என மதிப்பிடப்படுகிறது. உலக சந்தையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என கணிக்கப்படுகிறது. இந்திய செமிகண்டக்டர் வெற்றி, எதிர்காலத்தில் தன்னிறைவு பெற்ற மேம்பட்ட விண்வெளிப் பயணங்களுக்கு வழிவகுக்கும்.

Facebook Comments Box