யூஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி: காலிறுதிக்கு அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆகியோர் காலிறுதி சுற்றை எட்டினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், இரண்டாம் நிலை வீரரான அல்கராஸ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அங்கு அவர், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொள்கிறார். லெஹெக்கா, நான்காவது சுற்றில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை 7-6 (7-4), 6-4, 2-6, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

நான்காவது முறையும் முன்னாள் சாம்பியனுமான, ஏழாம் நிலை வீரர் ஜோகோவிச், ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃபை 6-3, 6-3, 6-2 என நேர் செட்களில் வென்றார். காலிறுதியில் அவர், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை சந்திக்கிறார். ஃபிரிட்ஸ், செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை 6-4, 6-3, 6-3 என வீழ்த்தி முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், முதலிடம் வகிக்கும் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா புக்சாவை 6-1, 6-4 என நேரடியாக வென்றார். அவர் காலிறுதியில் செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரசோவாவை எதிர்கொள்கிறார். வோண்ட்ரசோவா, ஒன்பதாம் நிலை வீராங்கனை கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் நான்காம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா, அந்நாட்டை சேர்ந்த அன் லியை 6-1, 6-2 என வென்றார். காலிறுதியில் அவர், செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவை எதிர்கொள்கிறார். கிரெஜிகோவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செட்டை 1-6, 7-6 (15-13), 6-3 என சிரமப்பட்டு வென்றார்.

இதே போட்டியின் ஜூனியர் மகளிர் பிரிவில், இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன், சீனாவின் ஜாங்-கியான் வெயை 7-6 (7-5), 6-3 என்ற கணக்கில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். 16 வயதான கோவைச் சேர்ந்த மாயா, ஸ்பெயினில் ரஃபேல் நடால் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த கட்டத்தில் அவர், இரண்டாம் நிலை வீராங்கனை ஹன்னா க்ளூக்மேனை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஹிதேஷ் (2-6, 4-6) மற்றும் கிறிஸ் தியாகி (3-6, 1-6) தங்கள் போட்டிகளில் முறையே அமெரிக்காவின் ஜெரிட் கெய்ன்ஸ், சுவீடன் வீரர் லுட்விக் ஹெடேவிட் ஆகியோரிடம் தோல்வியடைந்தனர்.

Facebook Comments Box