யுபிஐ வரலாற்றில் புதிய உச்சம்: ஆகஸ்ட் மாதத்தில் ரூ.24.85 லட்சம் கோடி பரிவர்த்தனை
இந்தியாவில் யுபிஐ வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 20 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாத யுபிஐ பரிவர்த்தனைகள் 20.01 பில்லியனை எட்டியுள்ளன. இது ஜூலை மாதத்தின் 19.47 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2.8% அதிகம் ஆகும்.
அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.24.85 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. சராசரி தினசரி பரிவர்த்தனை 645 மில்லியனாக இருந்தது. (ஜூலையில் இது 628 மில்லியன்).
சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.80,177 கோடியாகும். குறிப்பாக ஆகஸ்ட் 2-ம் தேதி மட்டும் 700 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றது சாதனையாகும்.
பாரத ஸ்டேட் வங்கியின் சமீபத்திய ஆய்வின்படி, கடந்த ஜூலையில் டிஜிட்டல் கட்டணங்களில் அதிக பங்களிப்பு செய்த மாநிலமாக மகாராஷ்டிரா (9.8%) இருந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகா (5.5%) மற்றும் உத்தரப்பிரதேசம் (5.3%) இடம் பெற்றன.