கட்சிக்கெதிரான நடவடிக்கை: கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியில் இருந்து நீக்கம்
தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகளும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு மீறல் காரணமாக பிஆர்எஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கவிதாவை கட்சியிலிருந்து உடனடியாக விலக்குவதற்கான முடிவை, பிஆர்எஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர்கள் சோமா பாரத் குமார் மற்றும் டி.ரவீந்தர் ராவ் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிஆர்எஸ் வெளியிட்ட அறிவிப்பில், “சமீப காலங்களில் எம்எல்சி கவிதா மேற்கொண்ட செயல்கள், அவரது அணுகுமுறை மற்றும் கட்சி விரோத போக்குகளை கட்சியின் உயர்நிலை குழு தீவிரமாக எடுத்துக் கொண்டது. அவரது செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் கட்சிக்கு களங்கம் உண்டாக்குவதாக கட்சித் தலைமை கருதியுள்ளது. இதன் விளைவாக அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பிஆர்எஸ் தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவே காரணம் என்று கவிதா நேரடியாக குற்றம் சாட்டினார்.
“காலேஸ்வரம் திட்டத்தின் முக்கிய அம்சங்களை ஹரிஷ் ராவும் சந்தோஷ் ராவும் கையாண்டனர். கேசிஆரின் கண்முன்னே அவர்கள் பெரும் செல்வத்தை சேர்த்தனர். அவர்கள் ஊழலின் அனகொண்டாக்கள்” என்று அவர் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், அவரை கட்சி இடைநீக்கம் செய்தது.