இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், பாதுகாப்புத்துறையில் பெரும் முதலீடு செய்து வரும் ரஷ்யா, சுகோய் Su-57E ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுவருகிறது.
இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யவும், சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், இந்தியா ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்க தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனவரியில், பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க முனைந்தார். எனினும், ஆயுத உற்பத்தியில் கூட்டாண்மை செய்து, குறிப்பாக உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியால், அமெரிக்காவின் யோசனை நிராகரிக்கப்பட்டது.
அதற்கிடையில், ரஷ்யா எண்ணெய் இறக்குமதி காரணமாக, இந்தியாவுக்கு 50% வரி விதித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா F-35 போர் விமானங்களை வாங்கமாட்டோம் என்று தெளிவுபடுத்தியது.
இதனால், இந்தியா உள்நாட்டு உற்பத்திக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2028-க்குள் முதல் உள்நாட்டு ஸ்டெல்த் விமானம் தயாராகும் என்றும், 2035க்குள் அது சேவைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் வான்படை திறன்களை மேம்படுத்தும் வகையில், ரஷ்யா தனது Su-57E ஸ்டெல்த் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்வந்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) ஏற்கனவே நாசிக்கில் சுகோய் Su-30 MKI விமானங்களை தயாரித்து வருகிறது. இதே உற்பத்தி மையங்களை பயன்படுத்தி, Su-57E போர் விமானங்களை உற்பத்தி செய்யும் வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ரஷ்யா, முக்கிய தொழில்நுட்பங்களையும் source code-உம் பகிர்ந்து, உற்பத்தியில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளது.
ஏற்கெனவே, இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரித்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. 2030க்குள் மேலும் 200 பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படும்.
மேலும், உத்தரபிரதேசத்தின் அமேதியில் உள்ள IRRPL நிறுவனம், இந்தியாவில் AK-203 துப்பாக்கிகளை தயாரித்து வருகிறது. 2030க்குள் 6 லட்சத்திற்கும் அதிகமான AK-203 துப்பாக்கிகள் இந்திய ராணுவத்துக்கு வழங்கப்படும்.
இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பின் அடிப்படையில், Kamov Ka-226T ஹெலிகாப்டர்கள் தயாரிக்க 2015ல் ஒப்பந்தம் கையெழுத்தாகி, 200க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் இந்திய இராணுவத்துக்காக உருவாக்கப்படுகின்றன.
மேலும், T-72 பீரங்கிகளுக்கான 1000 HP எஞ்சின்களை வாங்க 248 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய மேம்பாடுகள், இந்திய ராணுவத்தின் போர்திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.