முத்தரப்பு டி20: பாகிஸ்தானை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 169 ரன்கள் குவித்தது. இதில் செதிக்குல்லா அடல் 64 ரன்களும், இப்ராஹிம் ஸத்ரான் 65 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல பங்களிப்பு செய்தனர்.
வெற்றிக்காக 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் ஆடியது. ஆனால் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை சீராக இழந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.
ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களில் பரூக்கி, ரஷீத் கான், முகமது நபி, நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தினர்.
ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கும் இந்த முத்தரப்பு தொடரில், பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானிடம் ஏற்பட்ட இந்த தோல்வி தான் முதல் தோல்வி ஆகும். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இத்தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.