ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாகும்: ஜெய்சங்கர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) விரைவில் இறுதியான முடிவுக்கு வர வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வதேபுல் இந்தியா வந்துள்ளார். அவருடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர், பின்னர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“காலநிலை மாற்றம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தியோம்.

இந்தியாவுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஜெர்மனியின் குறிக்கோளை நாங்கள் பாராட்டுகிறோம். அதேபோல் ஏற்றுமதி தடைகளை நீக்குவதற்காக எடுத்த முயற்சிகளையும் வரவேற்கிறோம். செமிகண்டக்டர் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜெர்மனி ஆர்வம் காட்டுகிறது; இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். பசுமை ஹைட்ரஜன் துறையிலும் இரு நாடுகளும் இணைந்து வேலை செய்வது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.

உலக பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், இந்தியா-ஜெர்மனி மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை மேலும் வலியுறுத்துகின்றன. இந்தியா-ஜெர்மனி உறவு ஆழமானதாகவும், வேகமாக முன்னேறும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற ஜெர்மனி முழுமையான ஆதரவளிக்கும் என்று ஜோஹன் வதேபுல் எனக்கு உறுதியளித்துள்ளார். அந்த ஒப்பந்தத்துக்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது எண்ணத்தையும் நம்பிக்கையையும் நான் பகிர்கிறேன். வரவிருக்கும் நாட்களில் இது உறுதியான முடிவுக்கு நகரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது பரஸ்பர நலனுக்கும், உலக பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் உதவும்,” என ஜெய்சங்கர் கூறினார்.

Facebook Comments Box