அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு – நாகை இறால் விவசாயிகள் கவலை
அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியதால், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதனால் இறால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமே ஆபத்துக்குள்ளாகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்தியாவின் அந்நியச் செலாவணியில் கடல் உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் இறால் ஏற்றுமதி மிகப்பெரிய பங்கினை பெற்றுள்ளது. கடலிலிருந்து பிடிக்கப்படும் இறால்களும், பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்களும் தமிழகத்தில் இருந்து பெருமளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டமே முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் உற்பத்தியாகும் இறால்களில் சுமார் 60 சதவீதம் நாகை மாவட்டத்தில் தான் கிடைக்கின்றன. மேலும், இந்தத் துறையில் பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டண உயர்வு, இடுபொருட்கள் விலை அதிகரிப்பு, ஏற்றுமதியாளர்களால் திணிக்கப்படும் விலை வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளால் ஏற்கனவே சிரமப்பட்டு வந்த இறால் விவசாயிகளுக்கு, தற்போது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி பேராபத்தாக மாறியுள்ளது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை முதல் இந்த வரி அமலுக்கு வந்ததால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் இறாலை திரும்பப் பெறுமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் இறால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி தங்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்குமா என்ற கேள்வியும் அவர்களிடையே எழுந்துள்ளது.

பண்ணைகளில் உற்பத்தியாகும் இறால்களுக்கு உள்ளூர் சந்தையில் கேள்வி இல்லை. சுமார் 95 சதவீதம் ஏற்றுமதியில்தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வரிவிதிப்பால் நேரடி பாதிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படாது. அவர்கள் தங்களுக்கான கூடுதல் லாபத்தைச் சேர்த்துக் கொண்டு விற்பனையைத் தொடர்வார்கள். ஆனால் அதன் சுமை முழுவதுமாக இறால் விவசாயிகளின் மீது விழும்.

இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் கூறும் விலைக்கு உடன்பட்டு இறாலை விற்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், இந்த சீசனில் இறால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை தொடர்ந்து நீண்டால், பெரும்பான்மையான இறால் விவசாயிகள் தொழிலை விட்டே விலக வேண்டிய நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Facebook Comments Box