‘லோகா’ படத்தை 5 பாகங்களாக உருவாக்கும் திட்டம் – துல்கர் சல்மான் அறிவிப்பு

‘லோகா’ திரைப்படத்தை ஐந்து பாகங்களாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாக தயாரிப்பாளர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

டோமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடித்த ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரித்த இந்த படம் அனைத்து மொழிகளிலும் நல்ல ஆதரவை பெற்றதுடன், 100 கோடி வசூலைக் கடந்த சாதனையையும் எட்டியுள்ளது. இதன்மூலம், தென்னிந்தியாவில் நாயகியை மையப்படுத்தி இப்படியொரு உயர்ந்த வசூல் சாதித்த முதல் படமாகும்.

தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய துல்கர் சல்மான்,

“இந்த படத்தில் நான் நடித்ததில்லை, ஒரு ஆசிரியராக மாணவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளேன். முதலில் கேரளாவில் சிறிய அளவில்தான் இந்த முயற்சி தொடங்கியது. ஆனால் இன்று எல்லா இடங்களிலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த அனைவரும் தங்களது சொந்தப்படம் போலவே உழைத்தனர். வெற்றி அவர்களுக்கே சொந்தம்.

கல்யாணி இல்லாமல் இந்தக் கதாபாத்திரம் சாத்தியமே இல்லை. கதை கேட்டு மறுநாளே அவர் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தை நேரடி தமிழ்படம் போல டப்பிங் செய்த பாலா சாருக்கு நன்றி. இப்படிக்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இதை 5 பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளோம். நான் பல படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இந்த அளவுக்கு அன்பும் ஆதரவும் பெற்றது இதுதான். அதற்கான மரியாதையாக உடனடியாக அடுத்த பாகங்களை உருவாக்குவோம். ‘லோகா’ போன்று தொடர்ச்சியாக நல்ல படங்களை தருவோம்.

என் பேனரில் நான் மட்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இல்லை. சினிமாவை நேசிப்பதால், என் பேனரில் பிற நடிகர்கள் நடித்த படங்களையும் தயாரித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box