உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகள் அவசியம்: கர்நாடக அமைச்சரவை பரிந்துரை

கர்நாடகாவில் இனி நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச்சீட்டுகள் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திடம் அரசு பரிந்துரை செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) நம்பகத்தன்மை இழந்துவிட்டதாகவும் அரசு விளக்கியுள்ளது.

கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே. பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“உள்ளாட்சி தேர்தல்களில் EVM-களை விட வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களிக்க கர்நாடக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலை உருவாக்கவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்துள்ளோம். மக்கள் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்த வாக்குச்சீட்டு முறையே சிறந்தது” என்றார்.

மாநில தேர்தல் ஆணையம், இந்த பரிந்துரைகளை செயல்படுத்தி கர்நாடகா முழுவதும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவுள்ளது.

இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலில் மகாதேவபுரா தொகுதியில் வாக்கு மோசடி நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, நாடு முழுவதும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

Facebook Comments Box