ஜிஎஸ்டி குறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு: எஸ்பிஐ அறிக்கை

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தது ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஆய்வறிக்கை கூறியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் 22ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி இரண்டு அடுக்குகளில் மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறினார். அதாவது 5% மற்றும் 18% என்ற இரண்டு விகிதங்களே அமல்படுத்தப்படும். இதனால், முன்பு இருந்த 12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேசமயம் சிகரெட், புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% சிறப்பு வரி தொடரும்.

இந்த புதிய மாற்றம் பொதுமக்களுக்கும் வணிகத்துறைக்கும் நிதிச்சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், 22ஆம் தேதி முதல் பல பொருட்களின் விலை குறையும். இதன் பயன் நுகர்வோருக்கு நேரடியாக கிடைக்கும்.

ஆனால், அரசுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டி விகிதங்கள் குறைவதால் குறைந்தபட்சம் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும், வரி குறைப்பின் விளைவாக நுகர்வு அதிகரிக்கும் என்பதால், இந்த இழப்பு நிதிப்பற்றாக்குறையில் எந்தவிதமான பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகமானபோது சராசரி வரி விகிதம் 14.4% ஆக இருந்தது. இப்போது அது 9.5% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் எனப்படும் சுமார் 295 பொருட்களின் வரி விகிதம் 12% இல் இருந்து 5% அல்லது 0% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் விலைக் குறியீட்டில் பணவீக்கம் குறையும் என்றும், வங்கித்துறைக்கு இதனால் பெரும்பாலும் சாதகமான தாக்கம் ஏற்படும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box