45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள், நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, சிறந்த சேவையாற்றிய 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு,

  • “இந்தியாவின் எதிர்காலம் உருவாகும் பணியில் ஆசிரியர்களின் பங்கு அளவிட முடியாதது.
  • நவீன உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்தாலும், உண்மையில் கல்வித் தரத்தை உயர்த்துபவர்கள் ஸ்மார்ட் ஆசிரியர்கள்தான்.
  • மாணவர்களின் தேவைகளை உணர்ந்து, பாசமும் உணர்ச்சியையும் கலந்து கற்றல் முறையை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுபவர்கள் சிறந்த ஆசிரியர்கள். இத்தகைய ஆசிரியர்கள் தான் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான நபர்களாக மாணவர்களை உருவாக்குகிறார்கள்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்,

  • “பெண்களுக்கு கல்வி அளிப்பது என்பது முழு தேசத்தையும் முன்னேற்றும் முதலீடு.
  • பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதுதான்.
  • பின்தங்கிய சூழலில் இருந்து வரும் பெண்களுக்கு கல்வி ஆதரவு வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கை 2020 சிறப்பான பங்காற்றுகிறது” எனக் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், கூச்சம் கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும், எந்த சீர்திருத்தமும் வெற்றியடைவது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பில்தான் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய கல்விக் கொள்கையின் குறிக்கோள், இந்தியாவை உலக அறிவு மையமாக நிலைநிறுத்துவதாகும். “நமது ஆசிரியர்கள் உலகின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் கல்வி—எந்த துறையிலும் ஆசிரியர்களின் பங்களிப்பே, இந்தியாவை அறிவு வல்லரசாக உயர்த்தும்” எனத் திரவுபதி முர்மு தெரிவித்தார்

Facebook Comments Box