“அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது மனம் உடைத்தது” – ஓய்வு அறிவித்த அமித் மிஸ்ரா வெளிப்படை

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அணியில் தன்னைச் சார்ந்த அனுபவங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

42 வயதான மிஸ்ரா, கடைசியாக 2017-ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் 2024 வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். இந்திய அணிக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். குறிப்பாக, ஐபிஎலில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை பெற்ற அபூர்வ சாதனையாளர் என்ற பெயரை பெற்றவர்.

“என் முதல் காதலாகவும், ஆசானாகவும், மகிழ்ச்சியின் ஆதாரமாகவும் இருந்த கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். 25 ஆண்டுகள் நீண்ட பயணத்தின் பின் இதை அறிவிக்கிறேன்.

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களை தந்தது. அது என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதராகவும் உருவாக்கியது. ஆரம்ப கால போராட்டங்கள் கடந்த பின், மைதானத்தில் பெற்ற ஒவ்வொரு தருணமும் சிறப்பானதாக இருந்தது. இப்போது என் மனம் முழுதும் நன்றியும் அன்பும் நிறைந்துள்ளது. எனக்கு எல்லாவற்றையும் தந்தது கிரிக்கெட் தான். இனி நான் கற்றதும் பெற்றதுமாகிய அனைத்தையும் திருப்பித் தர விரும்புகிறேன்.

எனினும், சில சமயங்களில் அணியில் இடம் கிடைத்தது, சில சமயங்களில் வெளியில் வைக்கப்பட்டேன். ஆடும் பதினொன்றில் சில நேரங்களில் வாய்ப்பு கிடைத்தது; சில நேரங்களில் கிடைக்கவில்லை. இப்படியாக அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அனுபவம், உண்மையில் ஒரு வீரராக எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது. அதில் சந்தேகம் இல்லை. சில வீரர்கள் கேப்டனின் பிரிய வீரர்களாக இருக்கலாம். ஆனால் அது முக்கியம் அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது தன் திறமையை நிரூபிப்பதே மிகப் பெரிய விஷயம்,” என்று அமித் மிஸ்ரா உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கூறியுள்ளார்.

Facebook Comments Box