“ரஜினி கூட வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்” – ராதாரவி

‘தாவுத்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, “ரஜினி போன்றவரே இன்றைக்கு ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறார்” என்று நடிகர் ராதாரவி குறிப்பிட்டார்.

டர்ம் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநராக அறிமுகமாகும் பிரசாந்த் ராமன் இயக்கியுள்ள ‘தாவுத்’ படத்தில் லிங்கா, சாரா ஆச்சர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வழக்கமான சண்டை, வெட்டு குத்து காட்சிகள் இல்லாமல், வித்தியாசமான கேங்ஸ்டர் கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினருடன் இயக்குநர் சுசீந்திரனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் ராதாரவி பேசும்போது கூறியதாவது:

“சமீபத்தில் எனது உடல்நலம் சரியில்லாமல் இருந்தது, அதற்காக மன்னிக்க வேண்டும். சினிமா உலகில் ஒருவர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்; இல்லையெனில் வேறு ஒருவர் வாய்ப்பு பிடித்துக்கொள்வார். இந்தப் படத்தில் நான் இரண்டு நாட்கள் மட்டுமே பணிபுரிந்தேன். தயாரிப்பாளர் தம்பிதுரையின் பெயர் படத்தில் கதாப்பாத்திரமாக வந்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துகள்.

படத்தில் பேய் இருக்கிறதா? ரத்தம் இருக்கிறதா? என்று நான் கேட்டேன். ஆனால் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். இன்றைய காலத்தில் இவை தான் வெற்றிக்கு முக்கியம் எனக் கருதப்படுகிறது. ரஜினி போன்றவர் கூட வெட்டு குத்து, ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் நடிக்கிறார். அவர் கூட இப்படிச் செய்கிறார் என்றால், நமக்குக் குறை சொல்ல முடியாது. சினிமாவில் சில நேரங்களில் சுயநலமாக யோசிக்க வேண்டியிருக்கும். தயாரிப்பாளர் தன் பெயரை கதாப்பாத்திரத்திற்கு வைத்தது அதற்கே எடுத்துக்காட்டு.

படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். தமிழ் வாழ வேண்டும் என்றால், அனைவரும் தமிழ்ப் படங்களையே அதிகம் பார்க்க வேண்டும்,” என்றார் ராதாரவி.

Facebook Comments Box