அணுசக்தி கப்பல்கள், லேசர் & ஏஐ ஆயுதங்கள் – பாதுகாப்புப் படைகளுக்கான மத்திய அரசின் 15 ஆண்டு மாபெரும் திட்டம்

இந்திய பாதுகாப்புத் துறையை அடுத்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 15 ஆண்டுகள் நீடிக்கும் மிகப்பெரிய மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், லேசர் ஆயுதங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப அடிப்படையிலான போர்த் தளவாடங்கள், ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றமான ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன.

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்தன. இதன் பின்னணியிலேயே, படைகளின் வலிமையை பல மடங்கு உயர்த்தும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.

திட்டத்தின் படி:

  • ராணுவத்தில், டி-72 பீரங்கிகளை மாற்றி 1,800 அடுத்த தலைமுறை பீரங்கிகள், 400 இலகுரக பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், மேலும் 700 ரோபோட்டிக் தாக்குதல் ஆயுதங்கள் சேர்க்கப்பட உள்ளன.
  • கப்பற்படைக்கு, புதிய விமானம் தாங்கி போர்க் கப்பல், 10 அடுத்த தலைமுறை கப்பல்கள், அதிவேக சிறிய கப்பல்கள், 150 தாக்குதல் ட்ரோன்கள், 100 ரிமோட் இயக்க விமானங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை இணைக்கப்படும்.
  • விண்வெளி சார்ந்த போர் தொழில்நுட்பங்கள், அதிநவீன குண்டுகளை வீசும் ட்ரோன்கள், ஏஐ ஆயுதங்கள் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய மேம்பாட்டு முயற்சியாக கருதப்படுகிறது. இதை நிறைவேற்ற கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படவுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Facebook Comments Box