இன்று அரிய முழு சந்திர கிரகணம்: நேரடியாகக் காணலாம்
இந்த ஆண்டின் அபூர்வமான முழு சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. இதை சிறப்பு கருவிகள் இல்லாமல் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.
சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனை மூடினால் அது சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதத்தில் நிகழ்ந்தது. அதன் பின்னர் நடைபெறும் இன்றைய முழு சந்திர கிரகணம், இந்திய நேரப்படி இரவு 9.57 மணி முதல் அதிகாலை 1.27 மணி வரை நீடிக்கும். இதில் முழு கிரகண நிலை 11.42 மணி முதல் 12.33 மணி வரை இருக்கும். அப்போது சந்திரன் அடர்ந்த சிவப்பு நிறத்தில் தெரியும்; இதையே ‘ரத்த நிலா’ (Blood Moon) என்று அழைப்பர்.
இந்த கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா போன்ற பகுதிகளில் காணலாம். இந்தியாவில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தெளிவாகக் கண்ணுற்று ரசிக்க இயலும்.
மேலும், சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் தொலைநோக்கி வழியாகக் கிரகணத்தைப் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் கிரகணம் முடியும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இத்தகைய அரிய வானியல் நிகழ்வு மீண்டும் நடைபெறவிருக்கும் தேதி 2028 டிசம்பர் 31 என்பது குறிப்பிடத்தக்கது.