ஜார்க்கண்ட் சரண்டா வனப்பகுதியில் என்கவுன்டர் – ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் அமித் ஹஸ்தா சுட்டுக்கொல்லப்பட்டார்

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டம், சரண்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட் அமித் ஹஸ்தா சுட்டுக்கொல்லப்பட்டார்.

மத்திய அரசு, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் வனப்பகுதிகளில் நக்சல் கும்பல்களை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேடுதல் வேட்டை நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில போலீஸார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில், ஜார்க்கண்ட் பலாமு மாவட்டம் கேதல் கிராமத்தில் நடைபெற்ற கர்மா திருவிழாவிற்கு, நக்சலைட் கமாண்டர் சசிகாந்த் கன்ஜு வருவதாக உளவுத்தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாரை நோக்கி நக்சல் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்த, 2 போலீஸார் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து, நக்சலைட்களை பிடிக்க விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையின் போது, சாய்பாசா பகுதியில் நக்சல் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டபோது கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

அப்போது, டிரிதியா சம்மேளன் பிரஷ்துதி குழு (TSPC) என்ற நக்சல் அமைப்பின் மண்டல கமாண்டராக இருந்த அமித் ஹஸ்தா சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box