உக்ரைன் மீது ரஷ்யாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: 800 ட்ரோன்கள் ஏவல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் 800 ட்ரோன்களை ஏவியது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இதுவே மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற இந்தத் தாக்குதலில், உக்ரைன் அரசு தலைமையக கட்டிடத்தின் மேல் தளத்தில் தீப்பற்றி, புகை எழுந்தது.
இதுவரை கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் நேரடியாக குறிவைக்கப்படவில்லை என்பதாலும், இத்தாக்குதல் சிறப்பு கவனத்தை பெற்றுள்ளது. தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்ததுடன், கர்ப்பிணி பெண் ஒருவரைச் சேர்த்து 11 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், குடியிருப்பு அடுக்குமாடி ஒன்று சேதமடைந்ததால் அங்கிருந்த மக்கள் சிக்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட கடுமையான ட்ரோன் தாக்குதல்களில் இதுவே இரண்டாவது பெரியது. தீப்பற்றிய அரசு அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனின் பதிலடி
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை ட்ரோன் மூலம் தாக்கின. எண்ணெய் குழாய் வழித்தடம் சேதமடைந்ததாக உக்ரைன் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்தார்.
சமீபத்தில் உக்ரைனின் பெரிய போர்க்கப்பலை ரஷ்யா ட்ரோன் தாக்குதலால் அழித்தது. அப்போது பல உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர். 2022-ல் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்றாலும், ரஷ்ய அதிபர் புதின் தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கிறார். தற்போது ரஷ்யாவின் தீவிரத் தாக்குதல்கள் உக்ரைனுக்கு கடும் சவாலாக மாறியுள்ளன.