அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணிபுரிந்த 475 தென்கொரியர்கள் கைது
அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாநிலத்தில் கட்டுமானத்தில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரிய தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சவானா அருகே உள்ள எலாபெல் பகுதியில் அமைந்துள்ள பேட்டரி உற்பத்தி மையத்தில் அவர்கள் தங்கியிருப்பது தெரிய வந்ததால், அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்காக வந்த போலீஸாரைக் கண்டதும், தொழிலாளர்கள் ஓடிச்சென்று மறைவதற்கு முயன்றனர். அவர்களை பிடித்த போலீஸார், சுவரோடு வரிசையாக நிறுத்தி கைது செய்தனர். ஒவ்வொருவரிடமும் சட்டபூர்வ ஆவணங்கள் உள்ளதா என விசாரிக்கப்பட்டது. ஆவணமின்றி தங்கியிருந்தவர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டது. இதனால் ஹூண்டாய் தொழிற்சாலை வளாகம் போர்க்க்களத்தை ஒத்த காட்சியளித்தது. சில தொழிலாளர்கள் தப்பிக்க, ஏர் கண்டிஷனர் குழாய்களில் புகுந்தனர்; சிலர் கழிவுநீர் குளங்களில் இறங்கினர். அவர்களை போலீஸார் படகுகள் மூலம் பிடித்துக் கொண்டுவந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்; பலர் விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தவர்கள். அனைவரும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அமெரிக்காவில் உள்ள தென்கொரிய தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சோ ஹூயுன் அமெரிக்கா வரத் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.