அமிதாப் ஆரம்பப் படங்களில் நடித்த “கோபக்கார இளைஞன்” பாத்திரமே விராட் கோலி – சஞ்சய் பாங்கர்

1970–80களில் அமிதாப் பச்சன் தனது ஆரம்பகாலப் படங்களில் “கோபக்கார இளைஞன்” (Angry Young Man) கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அக்காலத்தில் நிலவிய அரசியல், பொருளாதார சூழ்நிலை மற்றும் அதிகரித்த ஊழல் காரணமாக இளைஞர்களிடையே பெரும் அதிருப்தி நிலவியது. அந்த உணர்வை திரையில் வெளிப்படுத்தியதே அமிதாப் கதாபாத்திரங்கள். அதே போன்று விராட் கோலியும் கேப்டனான போது கோபக்கார இளைஞனின் தன்மையோடு விளையாடினார் என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

டிடி ஸ்போர்ட்ஸிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “விராட் கோலியின் முகத்தில் தெரியும் கோபமும் உறுதியும் இயல்பான குணாதிசயம். அவரைப் போன்றவர்கள் தாங்கள் செய்வது சரி என்பதில் உறுதியுடன் இருப்பார்கள். 1975–80களில் அமிதாப் படங்கள் வெற்றி பெற்றதற்கு காரணம், அந்நேர இந்திய சமுதாயத்தில் ‘கோபக்கார இளைஞன்’ என்ற சிந்தனை ஆழமாக வேரூன்றியிருந்தது. கோலியும் அதே போன்று இந்திய கிரிக்கெட்டுக்கு தேவைப்பட்ட ஆவேசத்தை வழங்கினார்” என்றார்.

ராஹுல் திராவிட், சச்சின், லஷ்மண், சேவாக் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற சூழலில், கோலி தான் அணியை முன்னேற்றி கொண்டுசென்றார். டெஸ்ட் அணியின் ஆட்டமுறையை மாற்றி அமைத்தவர் கோலி என்பதையும் பாங்கர் குறிப்பிட்டார்.

தோனி ஓய்வு பெற்றவுடன் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில் தயாரிப்பின்றி கேப்டனாக களமிறங்கிய கோலி, 364 ரன்களை இலக்காக வைத்து சேஸ் செய்யும் சவாலுக்கு எதிர்கொண்டு இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். தோல்வியடைந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார். பின்னர், 40 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக உயர்ந்தார்.

மேலும், கேப்டனாக இருந்தபோது “அணியில் 5 பேட்டர்களும் ஒரு விக்கெட் கீப்பரும் முழு சுதந்திரத்துடன் விளையாட வேண்டும். அவர்களே 350–400 ரன்கள் எடுக்க வேண்டும். 7வது பேட்டர் அணியில் இருக்கக் கூடாது” என்ற அவரது கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோலி கேப்டன்சியை ஏற்றுக்கொண்டபோது இந்தியா டெஸ்ட் ரேங்கிங்கில் 7வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box