யாரும் அணுக முடியாதாம்: அமெரிக்காவின் 6-வது தலைமுறை போர் விமானம்!
உலகின் முதல் ஆறாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை அமெரிக்கா உருவாக்கத் தொடங்கியுள்ளது. F-47 என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன போர் விமானம், சீனாவின் J-35 மற்றும் ரஷ்யாவின் Su-57 விட சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு நாட்டின் இராணுவ வலிமையின் அடையாளங்களில் முக்கியமானவை போர் விமானங்களே. இத்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசுகள் முன்னிலையில் உள்ளன.
கடந்த மார்ச் 22-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விமானப்படைக்கான அடுத்த தலைமுறை போர் விமானமான F-47 உருவாக்க ஒப்பந்தத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதாக அறிவித்தார்.
இதுவரை யாரும் கண்டிராத வகையில், F-47 அதிநவீன போர் விமானமாக இருக்கும் என்றும், வேகம் முதல் நுண்ணறிவு வரையிலான அனைத்து திறன்களையும் கொண்டிருக்கும் என்றும், உலகில் எந்த போர் விமானமும் இதன் நெருக்கத்திற்கு கூட வராது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள F-22 ஸ்டெல்த் போர் விமானத்திற்கு மாற்றாக உருவாக்கப்படுவது இந்த புதிய விமானம். விலை வெளியிடப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு F-47க்கும் சுமார் 300 மில்லியன் டாலர் செலவாகும் என கூறப்படுகிறது. இதுவே அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலை மதிப்புடைய போர் விமானமாகும்.
Next Generation Air Dominance (NGAD) திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் F-47-க்கு, 2023-இல் Northrop Grumman போட்டியிலிருந்து விலகிய பிறகு, ஒப்பந்தம் போயிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க விமானப்படைக்காக 185-க்கும் மேற்பட்ட F-47 ரகப் போர் விமானங்களை உருவாக்க போயிங் நிறுவனம் தீவிரமாக செயல்படுகிறது.
ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத தன்மை, அதிவேக திறன், மேம்பட்ட சென்சார் அமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் ட்ரோன்களுடன் இணைந்து பறக்கும் திறன் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மிக அபாயகரமான சூழ்நிலைகளிலும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விமானத்தின் முக்கிய சிறப்பம்சம் மேம்பட்ட ஸ்டெல்த் தொழில்நுட்பம். இதன் வேகம் மணிக்கு 2,470 கிலோமீட்டர் (ஒலியை விட இரு மடங்கு அதிகம்). சுமார் 2,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட இது, AI அமைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் பல ட்ரோன்களை கட்டுப்படுத்தும் திறனும் பெற்றுள்ளது.
ரஷ்யாவின் Su-57, சீனாவின் J-35A போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விட 70% அதிக திறன் கொண்டதாக F-47 கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் புகழ்பெற்ற P-47 Thunderbolt போர் விமானத்தை நினைவுகூரும் வகையில் இதற்கு F-47 என்று பெயரிடப்பட்டதாகவும், அதேசமயம் அமெரிக்காவின் 47-வது அதிபர் பதவிக்காலத்தையும் குறிக்கும் வகையிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“மிகவும் மேம்பட்ட, அபாயகரமான மற்றும் தற்காப்புத் திறன் கொண்ட போர் விமானமாக F-47 உருவாகிறது. இது 2029-க்குள் சேவையில் சேரும்” என்று அமெரிக்க விமானப்படைத் தளபதி ஜெனரல் டேவிட் ஆல்வின் தெரிவித்துள்ளார்.