“நேபாளத்தில் அமைதி நிலவ வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்

நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் வளர்ச்சி இந்தியாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் கூறியதாவது:

“இன்றைய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதும், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு கூட்டத்தில் நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. அங்குள்ள வன்முறை எனது மனதை பாதிக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது பெரும் வருத்தமாக உள்ளது. நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு எங்களுக்குப் பெரும் முக்கியம். எனவே, நேபாளத்தில் வாழும் சகோதரர்களும் சகோதரிகளும் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு (ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உட்பட) நேபாள அரசு விதித்த தடையை எதிர்த்து, அதே நேரத்தில் ஆட்சியாளர்களின் ஊழலை எதிர்த்து தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடகத் தடைக்கு எதிரான எதிர்ப்புகள், ஊழல் எதிர்ப்பு போராட்டமாகவும் வலுத்ததால், அரசாங்கத்துக்குள்ளும் அதிருப்தி அதிகரித்தது. இதன் பின்னணியில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று பதவி ராஜினாமா செய்தார்.

முன்னதாக, சமூக வலைதள தடையை நீக்கவும், நாட்டில் பரவியிருந்த ஊழல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்மாண்டுவில் பேரணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர். அதோடு, பிரதமர் சர்மா ஒலி இல்லம் மீது கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தினர்.

இதனால், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. போராட்டத்தை அடக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கிகள் என பல்வேறு முறைகளை பயன்படுத்தினர். இந்த வன்முறையில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Facebook Comments Box