“இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதல்” – கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் கண்டனம்

ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலை கத்தார் அரசு கடுமையாக கண்டித்துள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில், “தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதல் அனைத்துவிதமான சர்வதேச சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறுகிறது. இது கத்தார் குடிமக்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விளைவுகளை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கத்தார் அரசு இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கின்றன. கத்தாரின் இறையாண்மை குறித்த எந்த அச்சுறுத்தலையும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு ஜெருசலேமில் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்களும், பேருந்துக்காக காத்திருந்தவர்களுமே தாக்குதலுக்கு இலக்கானனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கான பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் ராணுவம் தோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஹமாஸின் முக்கியத் தலைவர்கள் உயிர் தப்பிய நிலையில், காசா பிரிவு தலைவரின் மகன் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் உறுதி செய்துள்ளது.

Facebook Comments Box