இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிகளின் பட்டியலில், இங்கிலாந்துக்குப் பிறகு இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 2023-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, 8.4 லட்சம் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் அங்கு பிறந்தே குடியுரிமை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதை எதிர்த்து, ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா’ என்ற பெயரில் நாடு முழுவதும் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டினர் வருகைதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், எதிர்கால குடியேற்றக் கொள்கைகளில் மாற்றம் வருமோ என்ற அச்சம் சமூகத்தில் நிலவுகிறது.

இந்த சூழலில், சுதந்திரக் கட்சியின் செனட் உறுப்பினர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ், சமீபத்தில் அளித்த வானொலி பேட்டியில், “பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, வாக்கு வங்கிக்காகவே இந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிக்கிறது” என்று கூறினார்.

அவரது இந்தக் கருத்து ஆஸ்திரேலிய இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. கட்சியினரே உட்பட பலரும் ஜசிந்தா மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:

“ஜசிந்தாவின் கருத்தில் எந்தச் சான்றும் இல்லை. அவரது கருத்து, இந்தியர்கள் உணர்ச்சியைக் கடுமையாக புண்படுத்தியுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

Facebook Comments Box