நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் என்ன தடைகள்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் வினவியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், நடிகர் நாசர் தலைவர், நடிகர் விஷால் பொதுச் செயலாளர், நடிகர் கார்த்தி பொருளாளர், துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறி, தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் சட்ட விரோதமானது, செல்லாது என்று அறிவிக்கக் கோரி உறுப்பினர் நம்பிராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், “பதவிக்காலத்தை நீட்டித்தது சங்கச் சட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டத்திற்கும் முரணானது. அதனால் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து, நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் எந்தத் தீர்மானமும் எடுக்க தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

அப்போது, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பை நோக்கி, “தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது?” என்று நீதிபதி கேட்டார்.

இதற்கு நிர்வாகிகள் தரப்பில், “தேர்தல் நடத்துவதில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், தற்போது புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. அந்தப் பணி பாதிக்கப்படக் கூடும் என்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானித்தனர்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், “பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து சொல்லாமல், பின்னர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ல் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலின் பின்னர், வழக்குகள் காரணமாக 2022-ல் தான் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பின் வாதங்களை கேட்க, விசாரணை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box