மார்ஃபிங் புகைப்பட சர்ச்சை: ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் வழக்கு
முன்னணி பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு தொடர்ந்த சில நாட்களிலேயே, அவரது கணவர் அபிஷேக் பச்சனும், தனது புகைப்படங்கள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மார்ஃபிங் வீடியோக்களை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
செப்டம்பர் 10 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தனது பெயர், உருவம் மற்றும் போலியான வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என அபிஷேக் பச்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், “சமூக வலைதளங்களில் அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள், வீடியோக்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி, அசிங்கமான மற்றும் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களாக வெளியிடப்படுகின்றன. இது அவரின் தனிப்பட்ட உரிமை மற்றும் கண்ணியத்திற்கு கேடு விளைவிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையில் நீதிபதி தேஜாஸ் காரியா, அபிஷேக் பச்சனின் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூடுதல் விளக்கங்களை கோரியதுடன், வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா ராய் தனது பெயர், குரல், புகைப்படம் போன்றவை அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நீதிபதி தேஜாஸ் காரியா உடனடி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.