ஹாங் காங் ஓபன்: முதல் சுற்றிலேயே பி.வி. சிந்து வெளியேற்றம் – பிரனாய், லக்ஷயா சென் வெற்றி
ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல்சுற்றிலேயே தோல்வியடைந்தார். அதே நேரத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹெச்.எஸ். பிரனாய், லக்ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் முதல்சுற்றில், ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சிந்து, உலக தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனை எதிர்கொண்டார். கடும் போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 16-21, 19-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 34-வது நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், 14-வது நிலை சீன வீரர் லூ குவாங் ஸுவையை 21-17, 21-14 என்ற நேர் செட்களில் வென்றார். அதேபோல, 20-வது நிலை வீரரான லக்ஷயா சென், சீன தைபேயின் 19-வது நிலை வீரர் வாங் ஸு வெய்யை 22-20, 16-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.