பாஜகவுக்கு வாக்கு அளிப்பது கேரள கலாச்சாரத்தை பாதிக்கும்: முதல்வர் பினராயி விஜயன்

பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் சேதப்படுத்தும் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்தார். ஓண விழா மரபுகளை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எர்ணாகுளத்தில் நடைபெற்ற மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் என்ற கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், “சமீபத்தில் கேரளா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகளையும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையையும் பெற்றே தீர வேண்டும் என பாஜகவின் இலக்கை வெளிப்படையாகச் சொன்னார். இதன் மூலம் கேரளா பாஜகவின் முக்கிய குறியாக உள்ளது என்பதை தெளிவாக அறியலாம்.

ஒரு அரசியல் கட்சியாக அவர்கள் முயற்சிப்பது இயல்பு தான். ஆனால் மக்களால் புரிந்து கொள்ள வேண்டியது, பாஜகவுக்கு செல்கின்ற ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் கலாச்சாரத்தை அழிக்கும் என்பது. இந்த உணர்வு சமூகத்தில் நிலைத்து இருக்க வேண்டும்.

ஓண நாளில், வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் பாதத்தில் மகாபலியையும் சித்தரித்திருக்கும் ஓவியத்தை எனக்கு காட்டினர். இதன் பின்னணி என்னவெனில், மகாபலி மக்களைத் தரிசிக்க வருவதாக நம்பப்படும் ஓணத்தை, வேறு வகையில் மாற்றி காட்டும் முயற்சிதான். நாம் இன்று கொண்டாடும் விழாக்களை, பழைய வரையறைக்கு மாற்ற அவர்களின் எண்ணம் இருப்பது வெளிப்படுகிறது.

எனவே, அரசியல்வாதிகள் மட்டுமன்றி, கேரளாவில் உள்ள ஒவ்வொருவரும் வாக்கு செலுத்தும்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கவனிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box