நேபாளத்தில் சிக்கிய 240 ஆந்திர மக்கள் – மீட்பிற்கு தனி விமானம் அனுப்ப ஆந்திர அமைச்சர் லோகேஷ் நடவடிக்கை

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில் சிக்கியுள்ள இந்தியர்களில், ஆந்திராவை சேர்ந்த 240 பேரை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவர்களை பாதுகாப்பாக விசாகப்பட்டினம் அழைத்து வருவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்ய ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் முனைந்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கிய சிலர் அமராவதியில் உள்ள ஆந்திர அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களை விரைவில் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான அமைச்சர் லோகேஷ், உடனடியாக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நேபாளத்தில் சிக்கியவர்களுடன் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பின் மூலம் நேரடியாக பேசியும் நம்பிக்கை அளித்தார்.

காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 240 பேர் சிக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் “தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை நீங்கள் தங்கியுள்ள இடங்களை விட்டு வெளியே வராமல் இருங்கள்” என்று லோகேஷ் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், “முதல் கட்டத் தகவல்படி, 240 ஆந்திர மக்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் தனி விமானம் அனுப்பி அவர்களை பாதுகாப்பாக விசாகப்பட்டினம் அழைத்து வரப்படும்” என்றார்.

அதே நேரத்தில், நேபாள கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட தெலங்கானா மக்கள் சிக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்காக டெல்லியில் உள்ள தெலங்கானா பவனின் தொடர்பு எண்களை அரசு வெளியிட்டுள்ளது. விரைவில் தனி விமானம் அனுப்பி ஹைதராபாத் அழைத்து வரப்படும் என அங்குள்ள அமைச்சர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box