கிலோ ரூ.2க்கு தக்காளி விலை; விவசாயிகள் அவதி – தென்காசி நிலைமை

தென்காசி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி அதிகரித்ததால், சந்தையில் விலை கடுமையாக சரிந்துள்ளது. தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் இழப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

தென்காசி ஆலங்குளம், கீழப்பாவூர், சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, அகரக்கட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக தக்காளி பயிரிடப்படுகிறது. ஒருமாதம் முன்பு கிலோ ரூ.40 வரை விற்றதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், வரத்து அதிகரித்ததால் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.2 – ரூ.6 வரை மட்டுமே உள்ளது.

இதனால் பல விவசாயிகள் பறித்த தக்காளிகளை வயலிலேயே கொட்டிவிட்டனர். சிலர் மருந்து தெளித்தல், உரமிடுதல், களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணிகளை நிறுத்தி விட்டனர்.

விவசாயிகள் வலியுறுத்தியது:

“கிலோ ரூ.2க்கு விற்றால், பறிப்பு, கூலி, வாகன வாடகை, கமிஷன் கழித்தால் வருமானமே கிடையாது. பராமரிப்பு செலவு கூட போகாது. லாபம் கிடைப்பதற்குப் பதிலாக இழப்பு தான். அதனால் பயிர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோம். தக்காளிகள் செடிகளில் பழுத்து வீணாகின்றன” என்றனர்.

வியாபாரிகள் விளக்கம்:

“தமிழகமெங்கும் தக்காளி உற்பத்தி மிகுதியாக உள்ளது. தென்காசியிலும் தேவைக்கு அதிகமாக வரத்து இருப்பதால் விலை சரிந்துள்ளது” என தெரிவித்தனர்.

Facebook Comments Box