பிசிசிஐ தலைவர் பதவிக்கு சச்சின் பரிந்துரை? – விளக்கம் வெளியானது
பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி, 70 வயது நிறைவடைந்ததால் கடந்த வாரம் தனது பதவியிலிருந்து விலகினார். பிசிசிஐ விதிமுறைகளின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பதவியில் தொடர அனுமதி இல்லை என்பதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையில், அடுத்த பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவின. மேலும், வரும் 28ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில், 52 வயதான சச்சின் டெண்டுல்கரை பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிசிசிஐ தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இத்தகைய எந்த முன்னேற்றமும் இல்லை. ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.