நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு
நேபாளத்தில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நியமிக்கப்படுவதற்கான முனைப்பில் போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னர், இடைக்கால பிரதமரை யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் தொடர் முறையில் நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல் இதற்காக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இதில், முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் பதவியை ஏற்கும் நிலையில் உள்ளார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இடைக்கால அரசாங்க அமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாள அதிபர், ராணுவத் தளபதி அஷோக் சிக்டெல் மற்றும் சுசீலா கார்கி இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
போராட்டத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு: நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் தொடங்கிய முதல் நாளில் 19 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இந்தியப் பயணிகள் உயிரிழப்பு: காசியாபாத் நகரில் இருந்து நேபாளத்தின் பசுபதிநாத் கோயிலுக்குச் சென்ற ஆன்மிக சுற்றுலா பயணத்தில் ராம்வீர் சிங் கோலா மற்றும் அவரது மனைவி ராஜேஷ் கோலா 5 நட்சத்திர விடுதியில் தங்கினர். செப்டம்பர் 9-ஆம் தேதி, போராட்டக்காரர்கள் அந்த விடுதிக்கு தீ வைத்ததால், ராம்வீர் தனது மனைவியை கீழே இறக்க முயன்றபோது கை நழுவி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, ஆனால் அவரது மனைவி ராஜேஷ் கோலா உயிரிழந்தார். இன்று காலை அவரது உடல் காசியாபாத்திலுள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.