தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.82,000-ஐ நெருங்கியது

சென்னையில் தங்கம் விலை இன்று (செப்.12) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, தினமும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80,000-ஐ தாண்டி புதிய வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் உள்ளது. இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கூட இதேபோல் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.142-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Facebook Comments Box